திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுந்தரவேலு மற்றும் அவரது மனைவி விஜி வசித்து வருகின்றனர். இதில் சுந்தரவேலு என்பவர் ஓசூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மனமுடைந்த விஜி தன் வீட்டை பூட்டி விட்டு விஷமங்கலத்தில் இருக்கும் அவருடைய தாய்வீட்டில் தங்கியுள்ளார்.
இதனையடுத்து சுந்தரவேலு வீடு அடைத்து இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 50 ரூபாயையும், 2 பவுன் தங்க நகையையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர். இதன்பின்னர் ஓசூரில் இருந்து வந்த சுந்தரவேலு தன் வீட்டின் பூட்டு உடைந்து இருந்ததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்த சுந்தரவேலு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் பணம் மற்றும் நகையை திருடி சென்ற அந்த மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.