திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய தனியார் பனியன் நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட போவதில்லை என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல்லடம் அடுத்த சின்னகரையில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இதனால் அதிக அளவு பணியாளர்கள் தனி மனித இடைவெளி இல்லாமல் பணியில் ஈடுபட தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நிறுவன அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு அதிகாரிகள் உடனடியாக பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர். ஊரடங்கு காலகட்டத்தில் பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.