ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு மண்டப உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைப்பதோடு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் லெட்சுமாங்குடியில் ஒரு திருமண மண்டபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நகராட்சி ஆணையர் லதா, சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் பலர் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின் திருமண மண்டபத்திற்குள் கூடிநின்ற பொதுமக்கள் அனைவரையும் அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு மண்டப உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.