வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசன்காட்டுப்புதூர் பகுதியில் அருள் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கமல சங்கரி என்ற மனைவியும், காயத்ரிதேவி, காவியா ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11 மாதங்களுக்கு முன் அருள் நாகலிங்கம் மருத்துவமனை அருகில் புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அருள் நாகலிங்கம் மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு சென்றதால் வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பின் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 4 லட்சத்து 12 ஆயிரத்து 650 ரூபாய் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.