நந்தி வரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பள்ளிக்கூட தெரு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்குச் சென்று விட்டு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பரத் இல்லாத காரணத்தால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து பரத் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய 7 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டை வீசிய வழக்கில் நந்திவரம் பகுதியைச் சேர்ந்த கோகுல், அப்பு, நிஜாமுதீன், தனசேகரன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரித்தீஷ், கூடுவாஞ்சேரி சேர்ந்த கார்த்திக், அப்துல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.