வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் வீட்டிலிருந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த சிவா என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.