குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையம் கோல்டன் நகரில் கவுரிசங்கர்-பூங்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவுரிசங்கர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கவுரிசங்கர் மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்கும்படி அடிக்கடி பூங்கொடியை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பூங்கொடி நமது குழந்தைகள் பெரியவர்களானால் செலவுக்கு ஆகும் என கூறி வீட்டு மனையை விற்பதற்கும் மறுத்துவிட்டார்.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அதன்பின் கவுரிசங்கர் மாடிக்கு சென்று பார்த்தபோது பூங்கொடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கொடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.