விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்குத் துணைபோன தமிழக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுச்சேரியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.