விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு சுமார் ரூ.2,400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பயணிகள், சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட ரயில்களால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.