நெல் மூட்டைகள் விற்பனை செய்யாமல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் உள்பட 5 பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக வைத்துள்ளனர். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சாக்கு இல்லை எனக் கூறி அந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையில் 5000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததுடன் நெல்மணிகள் முளைக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய கோரி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்கின்றனர்.