திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் நின்று விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோப்பம்பாளையத்தில் விவசாயி சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான ஆடுகள் தொடர்ந்து திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் சிவகுமாரின் ஆடு திருட்டு போனதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சிவக்குமார் கோப்பம்பாளையத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறி திருட்டுப் போன தன்னுடைய ஆடை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனிடையில் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயர்மின் கோபுர மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின் சிவக்குமாரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டபோது “திருட்டுப்போன ஆட்டை விரைவில் கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு சிவக்குமார் உயர் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அதன்பிறகு சிவகுமாருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.