விவசாயி வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளமாங்குளம் பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது 3-வது மகள் படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிச்சையாவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.
இதனையடுத்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பிச்சையாவும் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.60,000 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிச்சையா சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.