விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாமடை பகுதியில் ஆறுமுகம் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னுமணி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழையூத்து பகுதியில் ஆறுமுகம்வேல் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னுமணி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆறுமுகம் வேலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஆறுமுகம் வேலை பொன்னுமணி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் திரண்டதால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் வேல் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பொன்னுமணியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.