சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விவசாயிகள் ஆண்டுதோறும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இந்த வருடம் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை இரவும், பகலும் பாதுகாத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து நாசமாகிவிட்டது. எனவே அரசு உடனடியாக நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என போராட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் சிதம்பரம் கொள்முதல் அலுவலரான அரங்கநாதனை காவல்துறையினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதனையடுத்து சிதம்பரம் கொள்முதல் அலுவலரான அரங்கநாதன் மாலைக்குள் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தெரிவித்ததாக காவல்துறையினர் விவசாயிகளிடம் கூறியுள்ளனர். அதன்பின் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.