15,000 ரூபாயை லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை சில தினங்களுக்கு முன்பாக அறுவடை செய்துள்ளார். அதன்பின் அறுவடை செய்த 250 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எழுத்தர் பாலமுருகன் என்பவரை ஆனந்தன் அணுகிய போது அவர் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் என 250 மூட்டைக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தந்தால் கொள்முதல் செய்வதாக கூறியுள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறிய அறிவுரையின் படி ஆனந்தன் ரசாயனம் தடவிய 15,000 ரூபாயை எடுத்து சென்றுள்ளார். இதனை அடுத்து கொள்முதல் நிலையத்தில் இருந்த பாலமுருகனிடம் கொண்டு சென்று விவசாயி கொடுக்கும் போது தொழிலாளியான கலைமணி என்பவர் மூலமாக பணத்தை வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜா மெல்வின் சிங் தலைமையிலான காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலைமணி மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.