ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதண்டபள்ளி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பூ மாலை கட்டுவதற்காக தேவைப்படும் இலைகளை பறிப்பதற்காக கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றின் வழியாக பெருமாள் சென்றுள்ளார். அப்போது திடீரென பெருமாள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 2-வது நாளாக தடுப்பணை அருகில் சடலமாக கிடந்த பெருமாளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் பெருமாளின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.