காவல்துறையினர் தாக்கியதில் மளிகை வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மளிகை வியாபாரியான முருகேசன் என்பவர் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் முருகேசனிடம் விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் லத்தியால் முருகேசனை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் முருகேசனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்தவுடன் முருகேசனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன்பின் அவர்கள் முருகேசனை தாக்கிய காவல்துறையினரை கைது செய்யுமாறு கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
மேலும் முருகேசனை தாக்கிய காவல்துறையினரை அதிகாரி பணி நீக்கம் செய்து சிறையில் அடைத்து விட்டார். அதன்பின் காவல்துறை டி.ஐ.ஜி. முருகேசனை இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.