வியாழன் கோளில் சுமார் நான்கு நொடிகள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
நமது விண்வெளியில் கோள்கள், சிறு கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இன்னும் நமது கண்களுக்கு புலப்படாத பல விஷ்யங்களும் உள்ளன. மேலும் நமது கோள்களின் இயக்கத்தினால் தான் அனைத்தும் சீராக இயங்கி கொண்டிருக்கிறது. அதிலும் நாம் வாழும் பூமியை போன்று மற்ற கோள்களும் சில தனிச்சிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக காணப்படுகிறது.
மேலும் வியாழன் ‘பூமியின் பாதுகாவலன்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பூமியை நோக்கி வரக் கூடிய விண்கற்களை தனது புவியீர்ப்பு விசையின் மூலம் ஈர்த்து கொள்கிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வானியலாளர்கள் வியாழன் கோளில் பிரகாசமான ஒளியை கண்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கோ அரிமேட்ஸு தலைமையிலான குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அப்பொழுது கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வியாழன் கோளில் பிரகாசமான ஒளி சுமார் நான்கு நொடிகளுக்கு தோன்றியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அதனை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ஏதோ ஒரு மர்ம பொருள் மோதியதால் தான் வெளிச்சம் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை பிரெஞ்சு வானியல் சங்கத்தின் மார்க் டெல்க்ரோயிக்ஸ் போன்ற விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.