பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின் வெறும் நான்கு நிறுவனங்களாகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.
வோடபோனுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்
இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-2020 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் காலாண்டில் வோடபோன் நிறுவனம் ரூ. 50,921 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வோடபோன் ரூ.4,874 கோடி நஷ்டத்தை மட்டுமே சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடோபோன் நிறுவனத்தின் இந்த காலாண்டின் வருவாய் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ. 11,146.4 கோடியாக உள்ளபோதும், சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.
நஷ்டத்துக்கு காரணம் என்ன?
இந்த நஷ்டத்துக்கு முக்கிய காரணமாக, Adjusted Gross Revenue எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பான வழக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
அதேபோல, 32 கோடியாக இருந்த வோடபோன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 31.1 கோடியாகக் குறைந்துள்ளது. வருவாயை ஈட்டுவதில் முக்கிய காரணியாகக் கருதப்படும் Average Revenue per User (ARPU) எனப்படும் ஒரு பயனாளரிடமிருந்து ஈட்டப்படும் சராசரி வருவாயும் 107 ரூபாயாகக் குறைந்துள்ளது.