தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தக் கட்டண உயர்வு மூலம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோவுக்கு (Reliance Jio) மாறும் வாய்ப்புள்ளதாக, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுனங்களின் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) பிரிவு எச்சரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் FY20Q2 இரண்டாவது காலாண்டின் முடிவில் வோடஃபோன் நிறுவனம் 50,921.9 கோடி ரூபாயும் பாா்தி ஏா்டெல் நிறுவனம் 23,045 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் எதிரொலியாகத்தான் தற்போது சேவைக் கட்டண உயர்வு நடைபெறுவதாகவும் இந்தக் கட்டண உயர்வால் வோடஃபோன் ஐடியா, பாா்தி ஏா்டெல் நிறுவனங்களின் ஆண்டின் வருமானம் 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.