கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது.
சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து லிப்ரா கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “லிப்ரா கூட்டமைப்பின் உறுப்பினராக இனி வோடோஃபோன் இல்லை. காலப்போக்கில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்களின் எண்ணவோட்டங்களில் மாற்றம் ஏற்படலாம், ஆனால் லிப்ரா திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்கப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் சுமார் 1500 நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வமாகவுள்ளதாக பேஸ்புக் தெரிவித்திருந்தது. இருப்பினும் அமெரிக்கா, சுவிச்சர்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் லிப்ரா திட்டம் தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின.
லிப்ரா திட்டம் தொடர்பாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆஜராகி, லிப்ரா ஒரு சிறந்த திட்டம்தான் என்றாலும் அதிலுள்ள சில சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.