இந்தோனேசியாவில் இருக்கும் செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இருக்கும் செமேரு என்ற மிகப்பெரிய எரிமலையானது, இம்மாத தொடக்கத்தில் திடீரென்று வெடித்து சிதறி, அதிலிருந்து சாம்பல் வெளியேறியது. இதில் 46 நபர்கள் பலியாகினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றினர்.
இந்நிலையில், இந்த எரிமலை நேற்று அதிகாலை நேரத்தில், மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. அதிலிருந்து அதிகப்படியான சாம்பல்கள் வெளியேறியது. மேலும் எரிமலை குழம்பு வெளியேற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த எரிமலையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், உலகிலேயே எரிமலைக்கு அருகே அதிக மக்கள்தொகை வசிக்கும் நாடு இந்தோனேசியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.