வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அட்டையை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முதல்கட்டமாக இந்த வசதி தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது பட்டியலில் பெயர் சேர்த்தலின் போது தாங்கள் வழங்கிய செல்பேசி எண்ணை கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம்.
http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களும் இந்த வசதியை விரைவில் பயன்படுத்தலாம். பட்டியலில் பெயரைச் சேர்த்துள்ள 20 வயது கல்லூரி மாணவி இதுபற்றிக் கூறுகையில், என்னுடைய சகோதரர் சகோதரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து இருந்தாலும், இதுவரை அவர்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. நான் இந்த முறை தான் என் பெயரை சேர்த்தேன். உடனே இணையதளத்தின் வாயிலாக வண்ண நிறத்தில் என்னுடைய வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளேன். அதைப் பார்த்தால் அசல் வாக்காளர் அட்டையை போன்றே உள்ளது என்று அவர் கூறினார்.