ஈரோட்டில் வாக்காளர் வரைவு பட்டியலில் ஒரே நபரின் பெயர் 11 இடங்களில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2019க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன்படி ஈரோட்டில் 9,27,897 ஆண்கள் 9,64,646 பெண்கள், 79 மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 18,89,622 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுமைக்கும் உள்ள 912 மையங்களில் 2,132 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் பார்வைக்கு சிறப்புமுகாம் போல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் படி வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்றம் செய்ய விரும்பினால் இன்றே மாற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து வந்த நிலையில்,
ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டு 109 வது பாகம் வரிசை எண் 42 லிருந்து 52 வரை பதினோரு இடங்களில் ரகுபதி என்னும் ஒரே நபரின் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதையறிந்த அப்பகுதி அரசியல் கட்சியினர் இது குறித்து புகார் அளித்து அதனை உடனடியாக சரிசெய்ய கோரி வலியுறுத்தினர். ஏற்கனவே இதே போன்று ஒரு பிரச்சனை வாக்காளர் பெயர் பட்டியலில் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.