100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மேளதாளத்துடன் அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பரிசு பொருளோ பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தொகுதியில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் மேளம் இசைக்க, தாம்பூலத் தட்டில் பழம் வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ்வாறு சத்திரம் வீதி, கடைவீதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சுப்ரியா போன்ற பலர் கலந்து கொண்டனர். மேலும்தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் சுபநிகழ்ச்சிகளுக்கு அடிப்பது போன்று வாக்களிக்கும் சுப விழா என்ற தலைப்பில் பத்திரிக்கையை அச்சடித்து வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த பத்திரிகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டுமெனவும், அன்பளிப்பு பெறுவதோ கொடுப்பதோ குற்றமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.