ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும் 12 ஆம் தேதிகளில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற 19-ஆம் தேதியன்று இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் படி அளித்த பதிலில் ஊழியர்கள் பற்றாக்குறை, வாக்குப் பதிவு சாதனங்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களை சுட்டிக்காட்டியது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.