வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிசென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், வெள்ளி டம்ளர், வெள்ளி குத்து விளக்கு, பால் கிண்ணம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் கீதா வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சோதனை செய்தார். அதுமட்டுமின்றி டப்பி என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அது வீட்டிலிருந்து அருகில் தோப்பு வரை ஓடிசென்று படுத்துக் கொண்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.