ஜவுளி நிறுவனத்தில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனி பகுதியில் முகேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய நிறுவனத்தின் அலுவலகமும், ஜவுளி குடோனும் காலனி அகில் மேடு 3-வது வீதியில் இருக்கிறது. இதனையடுத்து வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அலுவலகம் மற்றும் குடோனை தொழிலாளர்கள் அடைத்து சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலையில் தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு வந்தபோது குடோனின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து முகேஷ்குமார் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.