ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்ப போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பென் வாலஸ் பேட்டியளித்தபோது “நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. ஆகவே அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால் பிரிட்டனோ, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை. அதனால் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ராஜீய ரீதியில் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற எங்களது நிலைப்பாடே போர் தொடுப்பதில் இருந்து ரஷ்யாவை தடுக்கும் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார். இதற்கு முன்பாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதில் பிரிட்டன் உறுதியாக உள்ளதாக பென் வாலஸ் தெரிவித்து இருந்தார். உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அந்நாடு மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டுக்கு நேட்டோ படைகள் அனுப்பக்கூடாது என்று பென் வாலஸ் கூறியுள்ளார்.
சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு அமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது அதில் அங்கமாக இருந்த உப்கரன் சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. சுமார் 30 சதவீதத்தினர் ரஷ்ய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராகக் கூடாது என்றும், உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்படகூடாது என்றும் ரஷ்யா திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் அரசை எதிர்த்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு போர் தொடுத்தனர்.
ரஷ்ய ராணுவ உதவியுடன் அவர்கள் கிழக்கு உக்ரைனில் டொனட்ஸ்க், லூஹான்ஸ் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்தனர். அப்போது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷ்யா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில் உக்ரைன் எல்லை அருகே பெரும்பாலான படையினரை ரஷ்யா திரட்டி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கூறுகிறது. உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் அளவிற்கு மிக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க நேட்டோ படைகள் அனுப்பக்கூடாது என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.