அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் கலெக்டர் தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று கொண்டனர்.
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கி வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் திவ்யதர்சினி உறுதிமொழியில் வாசித்ததாவது “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக இருப்பதாக நான் நம்புகிறேன். இதனையடுத்து அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதன்பின் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் போன்றவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
ஆகவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். மேலும் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்புக்கு தெரியப்படுத்துவேன்” என்றும் நான் உறுதி கூறுகிறேன். அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வை பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசன், அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.