Categories
அரசியல்

மக்களே..! இந்தியாவிலே நாங்க தான்…. எங்களை பயன்படுத்திக்கோங்க… தலை நிமிர்த்து சொன்ன ஸ்டாலின் …!!

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளித்து ஆதரவு தர கோரி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசியபோது, சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், நம்முடைய கூட்டணி கட்சியினருக்கும் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்க வேண்டுமென்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரவிடுங்கள் உங்களுக்கு உழைக்க காத்திருக்கிறோம் என்று நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டோம். இவர்களுக்கு வாக்கு அளித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்று எங்கள் மேல் நம்பிக்கை வைத்து நீங்களும் உங்களுடைய வாக்குகளை வழங்குனீர்கள். உங்களால் முதலமைச்சர் ஆன நான் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்றேன்.

அன்று முதல் இன்று வரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்து கொண்டு இருக்கின்றேன். தேர்தலுக்கு முன்னால் என்னென்ன வாக்குறுதிகளை தந்தேனோ அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். பெண்கள் எல்லோருக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை செய்து இருக்கின்றோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கின்றோம். 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுத்து இருக்கின்றோம். ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைத்து இருக்கின்றோம். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருகின்றது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கையை வெளியிட்டோம். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வந்து இருக்கின்றோம். கிராம பகுதிகளை மேம்படுத்த நமக்கே நாம் திட்டத்தை புதுப்பிக்க இருக்கின்றோம். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கின்றோம். மக்களை தேடி மருத்துவம் என்கின்ற மகத்தான திட்டத்தின் மூலமாக லட்சகணக்கான மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகின்றார்கள். பொங்கல் வருவதற்குள் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை கொடுத்து இருப்போம். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், காவலர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தவருக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்த ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக இணைப்பு தரப் போகிறோம். மற்றவர்களுக்கு விரைவில் வழங்குவோம். மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிக்க தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் வந்தபோது என்னிடம் நீங்கள் கொடுத்த மனுக்களில் பெரும்பான்மையான மனுக்கள் தீர்வு காணப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை தலைநிமிர்ந்து சொல்ல நான் விரும்புகிறேன். அதுமட்டுமில்லை ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் செய்து கொடுத்து இருக்கிறோம் என்பதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் தனித்தன்மையாகும். 10 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகள் 505-ல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க. அரசாக மட்டும்தான் இருக்கமுடியும்.

இத்தகைய விவேகமும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நான் வரிசைப்படுத்துவது போல் ஏராளமான திட்டங்களை வரிசையாக கொண்டுவர இருக்கின்றோம். அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். எவ்வளவு பெரிய சிறந்த திட்டங்களை நாங்கள் தீட்டினாலும் அது பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் மக்களை வந்து சேரும். தடங்களோ, தடையும் இல்லாமல் எல்லா திட்டங்களும் மக்களை போய் சேர்வதற்கு வழி வகை ஏற்படுத்தி தருவதாக உங்களுடைய வாக்குகள் அமையும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைவதற்கான வாக்குகளாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் அவரவர்களுக்கான சின்னங்களில் வாக்களித்து, தமிழகத்தில் அமைந்துள்ள நல்லாட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வாக்காளர் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகின்றோம், மக்களே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள், உத்தரவிடுங்கள் உங்களுக்காக என்னாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக உங்கள் சகோதரனாக கலைஞரின் மகனாக கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாக கொண்ட ஒருவனாக செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதொரு தமிழ்நாட்டை அமைப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |