கணவருக்கு மறதிநோய் உள்ளதாக அவரை நம்ப வைத்து கோடிக்கணக்கில் பணத்தை திருடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் East Haven பகுதியில் மரினோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 20 வருடங்களாக கணவரின் பணத்தை மோசடி செய்து வந்திருக்கிறார். அதன்படி மரினோ தன் கணவரின் வங்கி கணக்கை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்தபடி அவரின் கையெழுத்தை போட்டு 20 வருடங்களில் $600,000 (கிட்டத்தட்ட ரூ 12 கோடிகள்) அளவில் மோசடி செய்திருக்கிறார். இதனை சமீபத்தில்தான் மரினோவின் கணவர் கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் மரினோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் வெளிவந்த தகவல்களான “கணவருக்கு மறதிநோய் இருப்பதாக மரினோ நம்ப வைத்திருக்கிறார். இதனையடுத்து கணவர் வங்கிக்கு செல்வதை மரினோ தடுத்து நிறுத்தி அவரது கணக்கில் பணம் குறைந்துள்ளதை தெரியாமல் பார்த்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கணவரின் சில உடைமைகள், நகைகள் மற்றும் அரிய நாணயங்கள் உட்பட அவரின் பொருட்களை அடகு வைத்து அந்த பணத்தை பெற்றும் மரினோ சொகுசாக செலவு செய்து இருக்கிறார்” என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மரினோ மீது திருட்டு மற்றும் மூன்றாம் நிலை மோசடி தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.