ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் சென்றபோது கடையநல்லூரை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென ஆட்டோவின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதனால் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த வெங்கடேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த முப்புடாதி மற்றும் டிரைவர் தமிழ்செல்வன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வெங்கடேசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.