ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா எனும் காலனி பகுதியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற கணவன்- மனைவி வசித்து வருகின்றனர். இதில் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியை ராசா மிராசுதாரர் எனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்போது ராஜலட்சுமியிடம் அங்கு இருந்த ஒரு பெண் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த பெண் ராஜலட்சுமிக்கு உதவுவது போன்று நடித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண், ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள் நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி ராஜலட்சுமியும் குளிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பெண் பிறந்து 4 நாட்களே ஆன அந்த குழந்தையை ஒரு கட்டைபையில் வைத்தபடி கடத்தி சென்றுள்ளார். இதனிடையில் குளித்துவிட்டு வந்த ராஜலட்சுமி குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜலட்சுமி தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அறிந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு திரண்டு வந்து அங்கு இருப்பவர்களிடம் குழந்தை குறித்து விசாரித்தனர்.
ஆனால் அவர்களுக்கு குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின் ராஜலட்சுமிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது ராஜலட்சுமியின் குழந்தையை அந்த பெண் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் நகர் அனைத்தும் தகவல் தெரிவித்து அந்தப் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.