தேனி மாவட்டம், கம்பம், குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான தினேஷ் குமார் அப்பகுதியில் உள்ள மாவு மில்லில் தினசரிக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரிடம் ரூ.200 கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த தேங்காய் உரிக்கும் அரிவாளால் தினேஷ்குமாரின் காலில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் இதில் தினேஷ் குமாரின் பின்னங்கால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் காவல் துறையினர் தினேஷ்குமாரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கம்பம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.