வேலைத் திறனை காரணம் காட்டி சர்வதேச பெருநிறுவனமான வால்மார்ட், இந்தியாவைச் சேர்ந்த 56 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசாஸ் தற்போது இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை போட்டி நிறுவனமான வால்மார்ட் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வால்மார்ட் இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலரான கிரிஷ் ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 28 விற்பனைக் கூடங்களில் நிர்வாகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், உயர்நிலை அலுவலர்கள் எட்டு பேர், மத்திய நிலை அலுவலர்கள் 48 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். இது நிறுவனத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கிய வால்மார்ட், கடந்த ஆண்டு ஆறு புதிய மொத்த விற்பனை மையங்களை தொடங்கியது. அந்நிறுவனத்தின் விற்பனை 2019ஆம் ஆண்டு 22 விழுக்காடு வளர்ந்துள்ளதாகவும் இந்தியாவின் சிறப்பான முதலீடுகளை வரும் நாட்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் நிர்வாகம் சர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.