இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது புகார் தெரிவித்திருக்கிறது. அதில், கடந்த 2009 ஆம் வருடம் இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த போது, ஜெனிவா ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த சமயத்தில் பாதுகாப்பு செயலாளராக கோட்டபாய ராஜபக்சே இருந்திருக்கிறார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் சர்வதேச குற்றம், மனிதநேய சட்டங்களை அவர் மீறியதாகவும், கொலைகள், மரண தண்டனை, வன்கொடுமைகள், சுதந்திரம் பறிக்கப்படுதல், மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல், மனிதநேயம் இல்லாமல் நடந்து கொள்ளுதல் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டது போன்று பல குற்ற செயல்கள் நடந்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.