சீனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தலையிட்டால் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்படும் என்று சீன அதிகாரிகள் காணொளி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கான சீன மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எனினும் இணையதளத்திலிருந்து இந்த காணொளி சில பிரச்சனைகளால் நீக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சீனாவின் அதிகாரிகள் அதே காணொளியை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
சீன அரசு, தைவான் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அதற்காக இராணுவ ஒத்திகைகளும் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தைவான் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருக்கிறது.
தைவான் நாட்டின் ராணுவத்தை சீன அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று வருகிறது எனில், கட்டாயமாக ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், அது எங்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவது என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.