ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சேரிங் கிராஸ் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற இடங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது கலெக்டர் அவசர மருத்துவ தேவை மற்றும் சரக்கு வாகனங்களை தவிர பிற வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அவ்வழியாக வருபவர்களின் அடையாள அட்டைகளை பார்வையிட்டு, இ-பதிவு இல்லாமல் சென்ற வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கூறும் போது, ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.