சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே நீங்கள் தொழில் செய்து வருவாய் ஈட்ட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அனைவரும் சமூக வலைதளங்களை மிகவும் மதிப்பதாகவும், இந்த உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் ஒரு சாதாரண மனிதனுக்கு எளிமையான முறையில் கிடைப்பதற்கு சமூக வலைத்தளம் முக்கிய பங்காற்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி திட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பங்கானது சிறப்பு வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை பதிவு செய்தாலும், தவறான தகவல்களை பொது மக்களிடையே பரப்பினாலும் இந்திய அரசின் சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் அழுத்தத்தினால் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்தியர்களின் கணக்குகளை முடக்கி, அதன் பின்னர் இந்தியாவின் சட்டங்கள் சீரானவை அல்ல என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.