ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடாமல் மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அலுவலர்கள் முதுமலை பகுதியில் ஆய்வு நடத்தி ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே அங்கு வேலை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அப்பகுதியில் உள்ள வனத்தில் வயது முதிர்ச்சி காரணமாக மூங்கில்களில் அரிசி விளைந்து இருப்பதையும், அதில் உதிர்ந்து கிடந்த அரிசிகளை ஊரக வேலைத் திட்ட பயனாளிகள் சேகரித்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊரக வேலைத் திட்ட பணிகளை மேற்கொள்ளலாமல் மூங்கிலரிசி சேகரித்தது தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் விதிமுறைகளை மீறி பணியாற்றிய பணியாளர்களை எச்சரித்து இனிவரும் நாட்களில் இவ்வாறு தவறுகள் நடைபெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.