போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து அங்குள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொன் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த மேக்ஸ் மசாஜ் சென்டர், தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில் இயங்கி வந்த மேக்ஸ் ஆயுர்வேதிக் சென்டர், திருச்சி கண்டோன்மெண்ட் ராஜா காலனியில் இயங்கி வந்த ரோஸ் பெட்டல்ஸ் ஸ்பா என்ற மசாஜ் சென்டர் போன்றவற்றில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வேலைக்கு அமர்த்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 7 இளம்பெண்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அதோடு அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த முக்கிய குற்றவாளிகள் தலைமறைவானதால் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் கட்டிடங்களை வாடகைக்கு விட்ட 2 உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து கமிஷனர் லோகநாதன் கூறும் போது, மாநகர எல்லைக்குள் இதுபோன்று மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை கண்டுபிடித்தால் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.