கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களின் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தார் சாலை கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படாததால், அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அந்த சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் நீண்ட நாட்களாக அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் அந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுவதாகவும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து, சேதமடைந்த தார் சாலையை சீரமைத்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து, சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.