இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதே போல் இவ்வாண்டும் அணையில் தண்ணீர் பெரிதளவில் இல்லாத காரணத்தினால் தண்ணீர் திறக்கப்பட மாட்டாது என்று கூறி இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன்படி விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி வாய்க்கால்களில் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிடக்கோரி கூறிவிட்டு, தண்ணீரை எதற்காக திறந்தீர்கள்? யாருக்காக திறந்தீர்கள்? என்று கூறி தண்ணீர் திறப்புக்கு விவசாயிகள் ஆத்திரத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.