எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவுடனான பொருளாதார உறவை உறுதிப்படுத்தவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார்.
சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சிபிஇசி திட்டத்தின் பணிகள் பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டமாகவே சிபிஇசி கருதப்படுகின்றது. பிரம்மாண்டமான இந்த பன்முக முயற்சி நம் தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். சிபிஇசி திட்டத்திற்கான பாகிஸ்தானின் அதிகாரசபையின் செயல்திறனை நாடு முழுவதும் பாராட்டும். அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல திட்டங்களை உள்ளடக்கியுள்ள சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையின் மதிப்பு 62 மில்லியன் அமெரிக்க டாலர்.
இந்த பொருளாதார பாதை பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை மிகவும் விரைவாக மேம்படுத்துவதுடன் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் பொருளாதார உறவை பலப்படுத்தும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானில் ஏறத்தாழ ஏழு லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும். 2 முதல் 2.5% வரை பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். சிபிஇசி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாகிஸ்தானில் முழு நீளத்திற்கும் செயல்படுத்தப்படும். இது பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் நகரை சீன தன்னாட்சி மாகாணமான சிங்சியாங்கை ஏராளமான நெடுஞ்சாலைகள் இருப்புப் பாதைகள் வழியே இணைக்கின்றது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக லாகூர்-கராச்சி இடையே நெடுஞ்சாலை அமைக்கப்படும். கராச்சி-பெசவார் இருப்புப்பாதையுடன் சீனாவின் சின்சியாங் இருப்புப்பாதை பாதையை இணைப்பதும் இந்த திட்டத்தின் ஒரு அங்கமாகும். மின்சார பற்றாக்குறையை நீக்குவதற்காக மின்கடத்தி வடம் அமைக்கவும், திரவ எரிவாயு முனையம் அமைக்கவும் சீனா அரசு 4 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மிகவும் வேகமாக உலகச் சந்தையில் முன்னேற்றம் காணும். பாகிஸ்தானின் இருப்புப்பாதை, சாலைகள், வானூர்தி, துறைமுக சேவைகள் மேம்படுத்தப்படும். மின்பற்றாக்குறை தீர்க்கப்பட்டு தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்த பொருளாதார பாதையை பாதுகாக்கும் பொறுப்பை சீன கடற்படைகள் ஏற்றுள்ளனர் இதற்காக பிஎஃப் 88 எனும் சிறப்புமிக்க படையை சீன அரசு உருவாக்கியுள்ளது.