கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் யூடியூபில் வயது வந்தோரின் (ஆபாசம்) படத்தை காட்டியதாகக் கூறப்படுகிறது.
மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் கல்வி தாளாளர் ஆண்டனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் கார்த்திகேயன், பெண் ஆய்வாளர்கள் ஆகியோர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தாளாளர் ஆண்டனியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மரிய ஆண்டனி மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியது தெரியவந்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவிகளின் உறவினர்கள் குவிந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.