Categories
மாநில செய்திகள்

கீழடியில் வெண்ணிற வண்ணப் பூச்சு கொண்ட தண்ணீர் கூஜா கண்டுபிடிப்பு!

கீழடியில் வெண்ணிற வண்ணப் பூச்சு கொண்ட தண்ணீர் கூஜா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்குள்ள கொந்தகையில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு செய்த ஆய்வில் 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று முதுமக்கள் தாழிகளில் எலும்புகள், மண்டை ஓடுகள், பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சுமார் 2 லிட்டர் அளவுள்ள அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கிடைத்துள்ளது. குவிந்த வாய் பகுதி, கழுத்து, விரிந்த உட்பகுதி உள்ள இந்த கூஜாவின் வெளிப்புறத்தில், வெண்ணிற வண்ணப் பூச்சு உள்ளது. மூலிகை பூச்சாக இருக்கும் என கூறப்படுகிறது.

அகரத்தில், தங்க நாணயம் மற்றும் பானை உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் பண்டைய பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டது. பண்டைய காலத்தில் அணிகலன்கள் செய்ய இந்த உலைகலன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Categories

Tech |