குடிநீர் பிரச்சனையால் அவதிப்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோபமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் தீடிரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.