குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்ததால் பழனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகில் இருக்கும் ஜவகர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கோதைமங்கலம் ஊராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து பழனி தாராபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின்பு பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொது மக்கள் குடிநீர் வராமல் மறியலை கைவிட போவதில்லை என தெளிவாக கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட சிலரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் போலீஸ் வாகனத்தையும் பொதுமக்கள் சுற்று வளைத்து சிறை பிடித்ததால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.