கோடை கால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்பூசணி பழங்களின் விற்பனையானது அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனியின் தாக்கமானது காலை 9 மணி வரை இருந்தாலும், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோடை கால சீசனான ஏப்ரல், மே மாதங்கள் வருவதற்கு முன்னதாகவே தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறும்போது, எப்போதும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் என அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு அதிக மழை பொழிவு காரணமாக அந்த மாவட்டத்தில் தர்பூசணி செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியது. இதனால் தர்பூசணி பழங்களை திண்டிவனத்தில் இருந்து கொண்டுவந்து விற்பனையை தொடங்கியுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் இந்த ஆண்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.